"உன் கனவுகளை நிஜமாக்கு
அதற்காக குறுக்கு வழியை நாடாதே"
பதினோரு வயது பச்சைக் குழந்தைக்கு
பக்குவப்பட்ட தந்தையின் அறிவுரை
இருபத்து நான்கு வருடங்கள் ஆடி
நேர்மையின், அடக்கத்தின் வழி நாடி
இப்படியும் வாழலாம் இலக்கணம் படைத்து
எளிமையாக, இயற்கையாக மண்ணை ஒற்றி
காவியமாகி, கண்ணீர் மல்க சென்றதை
கடைசி வரையில் மனம் கரைப்பதில்லை.
இப்படிப்பட்ட யதார்த்தங்களும் இருக்கின்றன
கோடிக்கணக்கான இள இதயங்களுக்கு
இந்த இலக்கணம் இனி அமுதளிக்கும்
நாமும் வாழலாம் எனச் சிந்தனை பிறக்கும்
ஒவ்வொரு உயிராய் நினைவு கூர்ந்து
உயிருக் குயிராய் வாழ்ந்தவர் போற்றி
நின்று அனைவருக்கும் நன்றி சான்ற பாங்கு
நல்லவர் நிச்சயம் வெல்லலாம் என்றது.
உழைக்கும் உழைப்பே தெய்வப்பாங்கு
உழைக்கும் வாய்ப்பை பெறுவது எளிது
உண்ணும் போதும் உறங்கும் போதும்
உழைப்பைச் சார்ந்தே எண்ணி வாழ்ந்தால்
சுத்தமான இருதயக் காற்றில் சுற்றி நின்ற
அசுத்தக் காற்று தானே அழிந்து பூக்கும்
கோபத்தை வென்ற இந்த நாயகன்
கோடானுகோடி காலம் வாழ்வான்
இந்திய மண்ணில் இப்படி வாழ்வதே
எனக்கும் உனக்கும் நல்லது உணர்த்தினான்
எத்தர் தான் ஜெயிக்க இயலும் எனும்
சட்டத்தை இவன் மாற்றி அமைத்தான்
இப்படித்தான் சமூகம் தன் குணத்தை
படிப்படியாக மாற்றி அமைக்கும்
ஒவ்வொரு நல்லவன் வெற்றியிலும்
ஒரு கோடி விதிகள் மாற்றப்படும்
இனியிவன் நன்றாக வாழ வேண்டும்
இன்னும் வேறு சேவை புரிய வேண்டும்
நிபுணன் சேவை நாட்டுக்குத் தேவை
நிச்சயமாகத் தொண்டுகள் வேண்டும்
அமைதிப்படைகள் நாட்டுக்குத் தேவை
அவை தான் மெல்ல சரித்திரம் எழுதும்
மாமனிதனுக்கு வீடு மட்டும் ஆகுமோ?
உயர்ந்த சிந்தனைவாதி சமூகத்திற்கே
வாழிய சச்சின் டெண்டுல்கரே!
வாழிய பல்லாண்டு பல்லாண்டு!
No comments:
Post a Comment